ஹவானா: உலகிலேயே முதன்முதலாக 2வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கியூபா நாடு தொடங்கி உள்ளது. ஏற்கனவே 12வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது 2 வயது முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளது.
உலகிலேயே தலைசிறைந்த மருத்துவர்கள் அதிகம் உள்ள நாடாக கியூபா திகழ்கிறது. அங்கு, தனியார் பள்ளிகளே கிடையாது. முழுவதும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் கல்வி அறிவு பெற்ற நாடாக கியூபா விளங்குகிறது. அதுபோல தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சொந்த வீடு வைத்திருக்கும் யாருக்கும் சொத்து வரி கிடையாது. அதே போன்று கடனுக்கு வீடு வாங்கி இருந்தால் வீட்டுக் கடனுக்கு வட்டியும் கிடையாது. இவ்வாறு பல்வேறு வசதிகளை கொண்டுள்ள கியூபா நாட்டைச் சேர்ந்த கொரோனா தொற்றின் தீவிர காலக்கட்டத்தின்போது, உலக நாடுகளுக்கு சென்று மருத்துவ சேவையாற்றி வந்தனர்.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில் பரவி வருவதாகவும், இதனால் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறி வருவதால், பல நாடுகள், அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்து சோதனை நடத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா உள்பட பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் சமீப காலமாகத்தான செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கியூபாவில் 2வயது குழந்தை முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்டாலா மற்றும் சோபிரனா எனும் இரு தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை முடிவடைந்து, தற்போது குழந்தைகளுக்கு போடும் பணியை தொடங்கி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.