ராமேஸ்வரம்,
வருகிற 25-ந் தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் அறிவித்து உள்ளனர்.
ஏற்கனவே ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார். அதையடுத்து நடைபெற்ற மீனவர்களின் தொடர் போராட்டத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதிகொடுத்ததை தொடர்ந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், ராமேஷ்வரத்தில் மீனவர் சங்கத்தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் டைரக்டர் கவுதமனும் கலந்துகொண்டார்.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீனவ சங்க தலைவர்கள் கூறியதாவது,
தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து வருகிற 7-ந் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை சென்று அந்நாட்டு அதிகாரிகளிடம் பேச உள்ளோம். அப்போது, இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்று கோர இருப்பதாக கூறினார்.
மேலும், 1974-ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவில் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், பாரம்பரிய மீன்பிடி உரிமையையும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றனர்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி குடும்பத்தோடு கச்சத்தீவில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதமன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.