கொல்கத்தா:

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தலைவர் முகுல்ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் நாடியா மாவட்டம் கிருஷ்ணாகஞ்ச் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்யஜித் பிஸ்வாஸ்.

சனிக்கிழமை மாலை மஜ்தியா அருகே ஃபுல்பாரி என்ற இடத்தில் நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்றார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த பிஸ்வாஸ் அருகில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரி சுட்டனர்.

அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்த நேரத்தில், அந்த கும்பல் தப்பியோடியது. ஆபத்தான நிலையில் பிஸ்வாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த படுகொலைக்கு பாஜக தலைவர் முகுல் ராய் காரணம் என நாடியா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கவுரிசங்கர் குற்றஞ்சாட்டினார்.

அதேசமயம், இந்த கொலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பிரச்சினை என்று பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் தெரிவித்தார்.

இதற்கிடையே, எம்எல்ஏ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பாஜக தலைவர் முகுல் ராய் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் ரயில்வே இணை அமைச்சராக இருந்த முகுல்ராய், மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.