ஐலாப்பூர், தெலுங்கானா
ஏ பி வி பி என்னும் பா ஜ க வின் மாணவர் அணியினர் தெலுங்கானாவில் கல்லூரி முதல்வர் ஷு அணிந்து தேசியக் கொடி ஏற்றியதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஐலாப்பூர் இங்குள்ள ஒரு இளநிலை கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு தேசியக் கொடி கல்லூரி முதல்வர் முகமது யாக்கூன் என்பவரால் ஏற்றப்பட்டது. அவர் கொடி ஏற்றிய சமயத்த்தில் காலில் ஷூ அணிந்திருந்தார். அப்போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்னும் பா ஜ கவின் மாணவர் அணியை சேர்ந்த ஒரு மாணவர் அவரை ஷூவை கழற்றுமாறு குரல் எழுப்பினார். உடனே பல மாணவர்களும் கோஷம் எழுப்பினார்கள்.
முதல்வர் அது போல சட்டம் ஏதும் இல்லை எனக் கூறி ஷூவுடனேயே கொடியை ஏற்றத் தொடங்கினார். பலர் அவரைத் தடுத்தும் கேட்காமல் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஏ பி வி பியை சேர்ந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக கல்லூரி முதல்வரை இழுத்து கல்லூரி வளாகத்துக்கு வெளியே தள்ளினார்கள்.
இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு வீடியோவில் சிலர் முகமது யாக்கூன் கையை பிடித்தபடி சாலைக்கு வெளியே அவருக்கு பாதுகாவலாக நிற்பதாகவும், அவரை கல்லூரியை விட்டு வெளியே செல்லக்கூடாது என தடுப்பதாகவும் காட்சிகள் பதிவாகி உள்ளன அந்த வீடியோவில் முதல்வர் ஷூ அணியக்கூடாது என மாணவர்களிடம் விளக்குகிறார். ஆனால் மாணவர்கள் “முதல்வர் ஒழிக , பாரத் மாதாகி ஜெய்” என குரல் எழுப்புகின்றனர்.
அது மட்டுமின்றி மூன்றாம் வீடியோ ஒன்றில் முகமது வை சுற்றி நிற்கும் மாணவர்கள் அவரை மன்னிப்பு கேட்குமாறும் ஜெய் ஸ்ரீராம் என்றும் கோஷம் போடுவதும், அவரைச் சட்டைக் காலரை பிடித்து இழுத்து ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்வதும், அதை அவர் மறுத்ததால் வெளியே தள்ளுவதையும் காட்சிகளாகக் கொண்டுள்ளது.
இது குறித்து முகமது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல், அலுவல் செய்ய விடாமல் தடுத்தல், மத, இன பாகுபாட்டை காட்டி கலகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவர்களில் சிலரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கைது பற்றிய விவரங்கள் போலீசாரால் தெரிவிக்கப் படவில்லை.
இந்த சம்பவத்தை இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்துள்ளன. இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் தலைவரான அம்ஜத் உல்லா கான் இது குறித்து, “முகமது யாக்கூன் நிஜாமாபாத் பகுதியில் ஒரு மதிப்புள்ள மனிதர். ஆனால் அவரை இவ்வாறு அவமானப் படுத்தும் சமயத்தில் உள்ளூர் பிரமுகர்களும், கல்லூரி ஊழியர்களும், போலீசாரும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏ பி வி பி மாணவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி உள்ளார்கள். நான் பல வீடியோ, மற்றும் புகைப்படங்களை பார்த்தேன். பிரதமர் மோடியில் தொடங்கி அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் காலணி அணிந்துதான் கொடி ஏற்றுகின்றனர். இது ஆர் எஸ் எஸ் இடையே சகிப்புத்தன்மை இல்லாததையும், இஸ்லாமியர்கள் மேல் உள்ள வெறுப்பையுமே காட்டுகிறது. இவை அனைத்தும் வரும் 2019ஆம் வருடம் வரப்போகும் தெலுங்கானா தேர்தலுக்காகத்தான் நடைபெறுகிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய கருத்தை அம்ஜத், தெலுங்கான முதல்வருக்கு கடிதமாகவும் அனுப்பியுள்ளார்.