சென்னை:

சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த விமானப்படை வீரர் ஒருவரது இதயத்தை டில்லியிலிருந்து சென்னைக்கு சரியான நேரத்தில் கொண்டு வந்து முதியவருக்கு பொருத்தி சாதனைபுரிந்துள்ளனர்.

டில்லியில் விமானப்படை வீரர் கஞ்சன்லால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலனில்லை.  கஞ்சன்லால்  மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதியவர் ஒருவருக்கு இதயம் தேவைப்படுவதாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமானப்படை வீரரின் இதயத்தை சென்னை பெரும்பாக்கம் மருத்துவமனையில் உள்ள முதியவருக்கு பொருத்த முடிவானது.

பொதுவாக 6 மணி நேரத்திற்குள் இதயத்தை பொருத்த வேண்டும். எனவே டில்லியில் இருந்து கடந்த 29 ம் தேதி மாலை 4.10 மணிக்கு விமானப்படை வீரரின் இதயம் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டது.

அன்று மாலை 6.50 மணிக்கு சென்னைக்கு அந்த விமானம் வந்தது. உடனே விமான நிலையத்தில் இருந்து பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இரவு 7.25 மணிக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் முதியவருக்கு அந்த இதயம் பொருத்தப்பட்டது.