கர்நாடகா:

கொரோனா தொற்றுநோயால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது, பழைய மைசூரு பிராந்தியத்தில் உள்ள காவிரி மற்றும் பிற நதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூற்றின்படி, காவிரி மற்றும் துணை நதிகளான கபினி, ஹேமாவதி, சிம்ஷா உள்ளிட்ட நதிகளின் நீரின் தரம் பலவருடங்களுக்கு பிறகு பழைய நிலையை மீண்டும் பெறுகின்றன.

சில தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் ரசாயணங்களை திறந்துவிடுகின்றன. யாத்ரீகர்கள் ஒவ்வொரு நாளும் துணி உட்பட பல டன் கழிவுப்பொருட்களை நதிகளில் கொட்டிக்கொண்டிருந்தனர். மற்ற நதிகளின் தலைவிதி காவிரியிலிருந்து வேறுபட்டதல்ல. குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழிற்சாலைகளில் இருந்து மாசுபடுத்தும் பொருட்கள்; யாத்ரீகர்களிடமிருந்து வரும் கழிவுப் பொருட்கள், மற்றும் கட்டுமான குப்பைகள் ஆகியவை ஆறுகளை மாசுபடுத்துகின்றன.


இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆறுகளில் மாசு அளவு கணிசமாகக் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும், தேசிய திட்டத்தின் கீழ் உள்ள வாரியம் மைசூருவில் உள்ள பிராந்திய ஆய்வகத்தில் உள்ள நீர் மாதிரிகளை சோதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரிகட்டாவில் உள்ள எழுபது வயதான மரிகவுடா என்பவர், கடந்த 30 வருடங்களாகவே காவிரியை இதுபோன்ற தெளிவான மற்றும் தூய்மையான தண்ணீருடன் பார்த்ததில்லை என்று கூறினார்.

நஞ்சம்மா என்பவர் கூறுகையில், மார்ச் 22 வரை சில இடங்களில் நீரின் நிறம் பச்சை-கருப்பு மற்றும் சில இடங்களில் நீல-கருப்பு நிறமாக இருந்தது எனத் தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் எதிர்காலத்திலும் இந்த நதி தெளிவாக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர். தொழில்துறை மற்றும் கழிவுகள் ஆற்றில் கலக்காமல் இருப்பதே கடந்த சில நாட்களாக காவிரி வியக்கத்தக்க சுத்தமான தண்ணீருடன் ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம் என அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். காவிரியில் குறைந்து வரும் மாசு அளவு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மூத்த வருவாய் அதிகாரிகளையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

காவிரியில் மாசு கணிசமாகக் குறைந்துள்ளது என்பது தெளிவாகிறது என்று பாண்டவபுர துணைப்பிரிவு வருவாய் உதவி ஆணையர் வி.ஆர். ஷைலஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஊரடங்கு உத்தரவால் காவிரி அதன் அசல் புனிதத்தை பெறுகிறது. எதிர்காலத்திலும் நதி சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எங்கள் துறை தொடங்கும் எனத் தெரிவித்தார்.