கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில், பாரதியஜனதா கட்சி இரட்டை இலக்க வெற்றியைக்கூட தாண்ட முடியாது என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

2021ம் ஆண்டு மே மாதம் மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்கத்தில் 2 நாள் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிர்பும் மாவட்டம் போல்பூரில் உள்ள, டக் பங்களா மைதானத்தில் துவங்கி, சவுரஷ்டா மூர் வரை நடந்த, பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார்.

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மேல் நின்றபடி வந்த அமித் ஷாவை காண, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ‘ஜெய்ஸ்ரீராம், பிரதமர் மோடி வாழ்க, அமித் ஷா வாழ்க’ என்ற கோஷங்களை எழுப்பினர்.

அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,எம்எல்ஏக்கள், அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா,  மம்தா அரசின் மீது, மக்களுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக தான் பலர் பாஜகவில் இணைந்த வருகின்றனர். மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் வன்முறை, கடத்தல், ஊழல் மற்றும் வங்க தேசத்தினரின் ஊடுருவலால், மம்தா ஆட்சி மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதன் எதிரொலியே இங்கு திரண்டுள்ள கூட்டம், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ‘தங்க வங்கம்’ என்ற பழைய பெருமையை, மேற்கு வங்கம் திரும்ப பெறும் என கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், அமித்ஷாவின் அதிரடி பேச்சு குறித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், பாஜகவால் மேற்குவங்கத்தில் இரட்டை இலக்க வெற்றியை தாண்டுவதுகூட கஷ்டம், இதுதான் உண்மை. அதற்கே அவர்கள் கடுமையாக போராட வேண்டியதிருக்கும். அமித்ஷாவின் தேர்தல் பிரசாரத்தை  ஊடகங்கள்தான் மிகைப்படுத்தி உள்ளன என்று சாடியுள்ளார்.

அத்துடன் குறிப்பு செய்தியாக,  ‘ தயவுசெய்து இந்த டிவீட்டைச் சேமிக்கவும், பாஜக ஏதேனும் சிறப்பாகச் செய்தால் நான் இந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் தேர்தல் பணியாற்றி  வருவது குறிப்பிடத்தக்கது.