வாரணாசி
வாரணாசியில் தீன் தயாள் உபாத்யாய் சிலை திறப்புக்காக 250 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டதால் 6 மாதமாக அவர்கள் வீடிழந்து தவிக்கின்றனர்.
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கங்கை நதி ஓரத்தில் ராஜ்காட் பாலம் அருகே தீன் தயாள் உபாத்யாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 63 அடி உயரம் உள்ள இந்த சிலையை சுமார் 6 மாதம் முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதையொட்டி அப்போது சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
அதில் ஒரு பகுதியாகச் சிலை திறப்புக்கு இரு நாள் முன்பு இந்த சிலைக்கு சுமார் 150 மீட்டர் தூரத்தில் இருந்த குடிசைகள் புல்டோசரால் இடிக்கப்பட்டன. இந்த குடிசை வாழ் மக்கள் இங்கு 60 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றன. இடிக்கப்பட்ட போது அதிகாரிகள் விழா முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் குடியேறலாம் என உறுதி அளித்துள்ளனர். ஆனால் இப்போது அது அரசு நிலம் எனக் கூறி அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.
வீடிழந்த 250 பேர் நடைபாதை மற்றும் கோவில்களில் வசித்து வருகின்றனர். மழை காரணமாக அவர்கள் பிளாஸ்டிக் தகடுகள் மற்றும் போர்டுகளைக் கொண்டு கூடாரம் அமைத்துத் தங்கி வருகின்றனர். அங்கு வசிக்கும் பெண்கள் குளிக்க மற்றும் கழிவறைக்காக வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது. அத்துடன் குடிநீருக்காகவும் பெண்கள் அலைய வேண்டியது உள்ளது.
இவர்களுக்கு இந்த முகவரியில் ரேஷன் அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இவர்களை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி மீண்டும் அங்குச் செல்ல விடாமல் விரட்டி அடிக்கின்றனர். குடிசைகள் இருந்த இடங்களில் தற்போது லாரிகள் மற்றும் உள்ளூர் வணிகர்கள் தங்கள் பொருட்களைச் சேமித்து வைப்பதற்காக மணல் மூலம் மேடு படுத்தி உள்ளனர்.
வீடிழந்தவர்கள் இப்பகுதி தலைவரைச் சந்தித்து உதவி கேட்டுள்ளனர். தற்போது இது பிரபலங்கள் வசிக்கும் பகுதி ஆகி விட்டதால் இந்த பகுதியில் வசிக்கக் கூடாது எனத் தலைவர் உதவ மறுத்துள்ளார். இவர்களுக்குத் தங்க இடம் இல்லாததால் ஊரடங்கு நேரத்தில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்குச் சிறு குழந்தைகள் உள்ளது என்பதாலும் வரும் குளிர்காலத்தில் வாரணாசி நகரில் கடும் குளிர் அடிக்கும் என்பதாலும் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வரும் இவர்களுக்கு எப்போது விடிவுகாலம் ஏற்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.