லாகூர்:

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் சரக்கு லாரிகளை ஓட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் தெற்கு மண்டலப் பகுதியில் இந்தியா எல்லையை ஓட்டிய பகுதியில் உள்ள தார்பர்கர் இஸ்லாம் காட்டில் சிந்த் எங்ரோ நிலக்கரி சுரங்க நிறுவனம் (எஸ்இசிஎம்சி) செயல்படுகிறது. தார் பாலைவனத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தில் நிலக்கரி ஏற்றிச் செல்ல கனரக லாரிகளை இயக்க ஆண்களை மட்டுமே பயன்படுத்தி வந்தது.

60 டன் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை இயக்க 30 பெண்களை தேர்வு செய்து அந்நிறுவனம் பயிற்சி அளித்தது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்றவற்றில் சிக்கி தவித்த இப்பெண்களுக்கு தற்போது புதிய வேலைவாய்ப்பாக இது அமைந்துள்ளது.

குலாபன் என்ற 25 வயது பெண் முதல் ஆளாக இந்த வகை டிரக் ஓட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 25 வயதாகும் இவர் 3 குழந்தைகளுக்கு தாய். இவருக்கு ஏற்கனவே கார் ஓட்ட தெரியும். அதனால் இதர பெண்களுக்கு இவர் முன்னுதாரணாக இருந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால், தற்போது பழகிவிட்டதால் இது சாதாரணமாக தெரிகிறது. மேலும், பல பெண்கள் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர்’’ என்றார்.

6 குழந்தைகளின் தாயான ராமு என்ற 29 வயது பெண் கூறுகையில், ‘‘குலாபான் இத்தகைய லாரியை ஓட்டும் போது என்னால் ஏன் ஓட்ட முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

குலாபான் கணவர் ஹர்ஜிலால் கூறுகையில், ‘‘கல்வி அறிவு இல்லாத எனது மனைவி கார் ஓட்டியதை கண்டு தார் பாலைவன பகுதி மக்கள் ஆச்சர்யப்பட்டனர். நான் பயணி இருக்கையில் உட்கார்ந்து எனது மனைவி டிரைவர் இருக்கையில் அமர்ந்து கார் ஓட்டியதை பார்த்து சிரித்தார்கள். ஆனால், எனது மனைவி அவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார்’’ என்றார்.

இந்த நிறுவனம் 125 லாரிகளை சுரங்கத்தில் பயன்படுத்தி வருகிறது. நிலக்கரியை ஒரு இடத்தில் இருந்து ஏற்றிச் சென்று மற்றொரு இடத்தில் சேகரித்து வைக்கும் பணிக்கு இந்த லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஆழத்தில் உள்ள நிலக்கரியை எடுக்கும் பணி தொடங்கியவுடன் 300 முதல் 400 லாரிகள் வரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் ஒரு லாரி டிரைவர் மாதம் ரூ. 40 ஆயிரம் சம்பாதிக்க முடியும்.

விவசாய நிலங்கள், சமையல் செய்தல், கூட்டி பெருக்கும் பணிகளில் மட்டுமே பணியாற்றி வந்த பெண்கள் தற்போது கலாச்சாரத்தை கடந்து இது போன்ற பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சவுதி அரேபியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பாகிஸ்தானில் பெண்கள் லாரி ஓட்ட முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் மின்சாரம் தயாரிக்க தரம் குறைவான நிலக்கரியை பயன்படுத்தி வருவதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சீனாவுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரியுடன், நீர் மற்றும் திரவ இயற்கை எரிவாயு போன்றவை பாகிஸ்தானின் முக்கிய மின்சார தயாரிப்பு காரணிகளாக உள்ளது.