மன்

சுமார் 800 இந்தியர்கள் ஓமன் நாட்டில் திடீரென பணியில் இருந்து அனுப்பப் பட்டதால் நடுத்தெருவில் அநாதைகள் போல் உணவுக்கும் வழியின்றி தவித்து வருகிறார்கள்.

கச்சா எண்ணெய் விலைக் குறைவால் ஓமன் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.  ஓமன் நாட்டின் இந்த வருட பட்ஜெட் எண்ணெய் விலை பாரலுக்கு $45 என்னும் கணக்கில் வெளியிடப்பட்டது.  அந்த சமயத்தில் எண்ணெய் விலை பாரலுக்கு $51 ஆக இருந்தது.  ஆனால் கடும் விலை வீழ்ச்சியால் தற்போது ஒரு பாரல் கச்சா எண்ணெய் $34.2  ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.   இதனால் பல நிறுவனங்களின் செயல்பாடுகள் அடியோடு நின்று போயின.  அதில் கட்டுமானப் பணிகள் முக்கிய இடம் வகிக்கிறது.

ஓமன் நாட்டில், கிட்டத்தட்ட 7 லட்சம் வெளிநாட்டினர் பணி புரிகின்றனர்.  அதில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து சென்று கட்டிட வேலைகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள்.  இவர்கள் தமிழ்நாடு, ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்திரப் பிரதேசம், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.    இவர்களில் பலருக்கு அவர்கள் பணி புரிந்த நிறுவனம் இவர்களின் ஒர்க் பர்மிட்டை புதுப்பிக்கவில்லை.   ஆகவே அவர்களை ஊதியம் அளிக்காமல் பணி நிறுத்தம் செய்து விட்டனர்.  பணியில் இல்லாததால் இவர்களுக்கு அளிக்கப் பட்ட இலவச இருப்பிடமும் பறி போனதால் அவர்களில் பலரும் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

பெரும்பாலானோர் தங்களிட்ம் இருந்த பணத்தைக் கொண்டு இந்தியா திரும்பி விட்டனர்.  ஆனால் சுமார் 800 பேருக்கு கையில் தற்போது சிறிதும் பணம் இல்லை.   அவர்களுடைய ஒர்க் பர்மிட் முடிந்து விட்ட படியால் அபராதம் செலுத்தினால் மட்டுமே அவர்களால் தாயகம் திரும்ப முடியும்.  தினசரி செலவுக்கே பணம் இல்லாத இவர்கள் தற்போது உண்ண உணவு, இருக்க இடம், மற்றும் குடிக்க நீர் வாங்கவும் வசதி இன்று நடுத்தெருவில் தவிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் தற்போது  இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர்.  அவர்களுக்கு அவசர உதவியாக ஒவ்வொருவருக்கும் 5 ரியால் (சுமார் ரூ.800) வழங்கப்பட்டுள்ளது.   ஆனால் அதை வைத்து அவசரச் செலவுகளும் செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.    நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமெனில் வரவேண்டிய ஊதியம் கிடைக்காமல் செல்ல பலருக்கு மனமில்லை.

பாதிக்கப்பட்ட தொழிலாளிகளில் ஒருவர், “தற்போது எங்களுக்கு தூதரகம் செய்ய வேண்டிய உதவிகள் மூன்று.  எங்களுக்கு எங்களுக்கு பணி அளித்தவரிடமிருந்து நோ அப்ஜக்‌ஷன் சர்டிபிகேட் மற்றும் வரவேண்டிய ஊதியம் ஆகியவற்றை பெற்று எங்களை அனுப்பி வைப்பது,  அல்லது, எங்களுக்கு இதே நாட்டிலேயே வேறு இடத்தில் பணி கிடைக்க உதவுவது, அல்லது எங்களை இங்கேயே தங்க அனுமதி வாங்கிக் கொடுத்து எங்கள் குறைகளை சட்டப்படி நிவர்த்தி செய்துக் கொள்ள உதவுவது ஆகியவையே ஆகும்.   இந்த மூன்றுமே தூதரகத்தில் உள்ள சட்ட வல்லுனர்கள் முயன்று உடனடியாக செய்ய வேண்டும்.  அதுவரையில் எங்களுக்கு தேவையான உதவிகளை தூதரகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என கண்ணீருடன் தெரிவித்தார்.