டில்லி

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாக்பூரில் நடைபெறும் ஆர் எஸ் எஸ்  கூட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளார்.

வரும் 7 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் நாக்பூரில் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது.   இந்த விழாவில் கலந்துக் கொள்ள முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.   பிரணாப் முகர்ஜி அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.   இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி என்னும் முறையில் அவர் கலந்துக் கொள்வது மதச்சார்பின்மைக்கு விரோதமானது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார்.    முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்  ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொள்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதை முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் என கூறி உள்ளனர்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, “நான் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ள ஆர் எஸ் எஸ் நிகழ்வில்கலந்துக் கொள்ள போவது உண்மைதான்.   அது குறித்து என்னிடம் பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.   இப்போது நான் எதுவும் கூற விரும்பவில்லை.   நாக்பூரில் அந்த நிகழ்வில் நான் என்ன கூற வேண்டுமோ அதைக் கூறுவேன்” என பதில் அளித்துள்ளார்.