போபால்: மத்திய பிரதேசத்தில் 4.5 லட்சம் கழிப்பறைகள் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாக 540 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2014ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய அரசு ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என்று  உறுதி அளித்தது.

தற்போது 90% இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்துள்ளது. ஆனால் தாம் அரியணையில் அமரும் முன்பே 2014-ம் ஆண்டு வரை 40% இந்தியர்களுக்குத் தான் கழிப்பறை வசதி இருந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

ஆனால் இப்போது அப்படி கட்டப்பட்ட கழிப்பறைகளில் ஊழல் நடைபெற்று உள்ளது தெரிய வந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் 540 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக ஆவணங்களில் மட்டுமே இருக்கிறது.

இந்த முறைகேடு குணா மாவட்டத்தில் 2017ம் ஆண்டே கண்டுபிடிக்கப் பட்டது. அதாவது, இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட விவரமே அலாதியானது.

கழிப்பறைகள் கட்டப்பட்டதாக அரசுக்கு அதன் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு இருந்தன. அவற்றை ஜிபிஎஸ் மூலம் நவீன முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி பார்த்த போது தான் அவை அந்த குறிப்பிட்ட இடத்தில் கட்டப்பட வில்லை என்பது அறியப்பட்டது.

லக்காட்ஜாம் பகுதி மக்கள் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதுதான் முறைகேடு விவரம் வெளிவந்தது. சைத்ராம், ராம் கிஷோர், கன்ஸ்ராஜ், ஷாம்புத்யால் ஆகிய நான்கு பேர் வீடுகளில் கழிப்பறை இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

அரசு ஆவணங்களில் இடம்பெற்ற புகைப்படங்கள் அனைத்தும் அவர்களின் அருகில் உள்ள வீடுகளின் கழிப்பறை போட்டோக்கள் ஆகும். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

லக்காட்ஜாம் பஞ்சாயத்தில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக அவர்கள் 4 பேருக்கும் 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.