மும்பை:

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக சிவசேனாவும், பாஜகவும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தது

பல்வேறு பிரச்சினைகளில் பாஜகவை சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்தது. மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, எங்கள் ஆதரவு இன்றி ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என மறைமுகமாக சிவசேனாவை எச்சரித்தார்.

இதற்கு சிவசேனா தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய பாஜக முடிவு செய்துவிட்டதா? என சிவசேனா கேள்வி எழுப்பியது.
இருதரப்பிலும் மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்து, மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவும் பாஜகவும் . கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

23 மக்களவை தொகுதிகளில் சிவசேனா
கட்சியும், 25 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து, மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.