புல்வாமா தாக்குதலை தொடர்ந்து போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் சர்ஜிக்கல் ஸ்டைக் போன்று தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

india

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். ஜெய்ஷ் -இ- முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருவதுடன், இதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமெனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வீரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய விமானப்படைகள் இரவு பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப்படைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலுக்கான ஒத்திகையில் ஈடுபட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இரவு பகலாக விடிய விடிய நடத்தப்பட்ட போர் ஒத்திகையில் நவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலகு ரக தேஜாஸ் விமானங்கள், நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் (ஏ.எல்.எச்.), தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, வானில் இருந்து வான் இலக்கை தகர்க்கும் அஸ்திரா ஏவுகணை போன்றவை இரவிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தங்கள் வலிமையை உறுதி செய்வதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் பாகிஸ்தானிற்கு பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.