போபால்:

மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசிய திறந்த வெளி பள்ளி நிறுவன தலைவர் ச ந்திரா பி சர்மா கடந்த மாதம் 22ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிறுவனம் தன்னாட்சி அந்தஸ்துடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த 10, 12ம் வகுப்பு தேர்வில் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த திட்டம் மூலம் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லாமலே விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அலோக் அகர்வால் போபாலில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ இந்த திட்டத்தின் கீழ் 10, 12ம் வகுப்புகள் தேர்வு நடந்த அன்று மத்திய பிரதேச மாநிலத்தில் ஆயிரத்து 200 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

தேர்வு நடந்த அன்று ரத்லம், உமரியா, செகோர் ஆகிய மையங்களின் வருகை பதிவேடு நகலை அவர் வெளியிட்டார். மேலும், அவர் கூறுகையில், ‘‘சகோத் கேந்திர வித்யாலயா தேர்வு மையத்தில் 693 பேர் வர வேண்டிய இடத்தில் 19 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். ஆனால் தேர்வு முடிவில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சகோத் ஜவஹர் நவவோதயா வித்யாலயாவில் 351 பேரும், உமரியா நவோதயா வித்யாலயா பள்ளியில் 175 பேரும் தேர்வு எழுதவில்லை. ஆனால் அனைவரும் தேர்ச்சியாகியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அனைத்து மையங்களிலும் நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்’’ என்றார்.