டில்லி

கொரோனா தொற்றில் இருந்து குணம் அடையும் விகிதம் அகில இந்திய அளவில் 52.96% ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.   தற்போது பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 4 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.  இதுவரை 3.81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் 12600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 2.05 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   தற்போது மொத்தம் 953 கொரோனா பரிசோதனை நிலையங்கள் உள்ளன.  இவற்றில் அரசு நிலையங்கள் 699 மற்றும் தனியார் நிலையங்கள் 254 ஆகும்.

ரியல் டை பிசிஆர் அடிப்படையிலான சோதனை நிலையங்கள் அரசு தரப்பில் 349 மற்றும் தனியார் தரப்பில் 191 என 540 உள்ளன.  டுருநேட் அடிப்படையிலான சோதனை நிலையங்கள் அரசு தரப்பில் 325, தனியார் தரப்பில் 15 என 340 உளன.  சிபிநாட் அடிப்படையில் உள்ள சோதனை நிலையங்கள் அரசு தரப்பில் 25 மற்றும் தனியார் தரப்பில் 48 என 73 உள்ளன

தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,63,305 ஆகும்.  இதுவரை 2,05,182 பேர் குணம் அடைந்துள்ளனர்.  நேற்றைய கணக்குப்படி அகில இந்திய அளவில்  குணமடையும் விகிதம் 52.96% ஆக உயர்ந்துள்ளது. ”என தெரிவிக்கப்பட்டுள்ளது.