டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் தற்போது 47 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆயினும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று சுகாதார இணைச்செயலர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம், “கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 991 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 14,378 பேர் ஆகி உள்ளது. இதில் 4291 பேர் தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவார்கள். அதாவது 29.8% பேர் இவ்வாறு பாதிப்பு அடைந்துள்ளனர்.
சற்றே ஆறுதல் அளிக்கும் விவகாரம் என்னவென்றால் இதுவரை 22 மாவட்டங்களில் புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்படவில்லை மொத்தமாக 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை. தற்போது இந்த 47 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை” என தெரிவித்துள்ளார்.