காந்திநகர்: பிரபல கல்வி நிலையம் ஒன்றில் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடைகள் அகற்றி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் என்னுமிடத்தில் ஸ்ரீசஹ்ஜானந்த் இன்ஸ்ட்டியூட் என்ற கல்வி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு முதல் இந்த கல்லூரி இயங்குகிறது.
கிட்டத்தட்ட 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வி நிலையத்தின் கட்டுப்பாட்டில் விடுதி ஒன்றும் உள்ளது. அதில் தொலைதூர கிராமங்களில் இருந்து 68 மாணவிகள் தங்கி பயிலுகின்றனர்.
இந் நிலையில் அந்த விடுதியில் நடைபெற்ற சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலரும் சமையலறை, கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த புகார்கள் அனைத்தும் விடுதி நிர்வாகி வழியாக கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்காவின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியே அழைக்கப்பட்ட 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் நடத்திய விதம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதாவது, அந்த 68 பேரில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பப்பட 2 பேர் ஒதுங்கியிருக்கின்றனர். அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகம், செய்த காரியம் இப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
எஞ்சியிருந்த 66 பேரும் உடனடியாக பாத்ரூமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைவரின் உள்ளாடைகளையும் அகற்றி, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்று சோதனை நடத்தி உள்ளனர்.
இந்த விவகாரம் எப்படியோ வெளியில் கசிந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார். எனினும், இந்த விவகாரம் பரவலாக வெளியில் வர, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.