காந்திநகர்,

குஜராத்தில் சமீபத்தில் பதவி ஏற்ற பாஜ அரசில், இலாகா ஒதுக்குவதில் பிரச்சினை நீடித்ததால் துணைமுதல்வர் நிதின்பட்டேன் தனது பொறுப்புகளை ஏற்காமல் தவிர்த்து வந்தார்.

இதன் காரணமாக பாஜக அரசு கவிழும் சூழல் உருவானது. இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், நிதின்பட்டேலுக்கு, பட்டேல் இன தலைவரான ஹர்திக் பட்டேல், பாஜகவில் இருந்து வெளியே வாருங்கள் என்று  அழைப்பு விடுத்திருந்தார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

துணைமுதல்வர் நிதின் பட்டேலுக்கு குஜராத் எம்எல்எக்களில் 10க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஹர்திக் பட்டேலின் அழைப்பும், நிதின் பட்டேலின் அமைதியும் பரபரப்பை கூட்டியது.

அதைத்தொடர்ந்து,  பா.ஜ.க. தலைவர் அமித் ஷா   நிதின் பட்டேலுடன் தொலைபேசியில் பேசி சமாதானப்படுத்தி வந்தார். அதைத்தொடர்ந்து நிதின் பட்டேலுக்கு அவர் ஏற்கனவே நிர்வகித்து வந்த  நிதித்துறை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதையடுத்து குஜராத் பிரச்சினை முடிவுக்கு வந்தது. நிதன் பட்டேலும் தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இதன் காரணமாக குஜராத் பாஜக அரசு கவிழும் சூழ்நிலை தற்காலிகமாக தப்பித்துவிட்டது.

நடைபெற்று முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களை பிடித்த பாஜக அரசு பதவி ஏற்றது. முதல்வர் விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டார். அவரது அமைச்சரவையில் துணை முதல்வராக  நிதின் பட்டேல் பதவியேற்றார். ஆனால், அவருக்கு கடந்த முறை வகித்து வந்த நிதித்துறை ஒதுக்கப்படாததால், அதிருப்தி தெரிவித்தார். தனது ஆதரவாளர்களுடன் வெளியேறப்போவதாகக் கூறியதாக தகவல் வெளியாகின.

இதன் காரணமாக பதவியேற்ற ஒரு சில நாளிலேயே குஜராத் பாஜக அரசு கவிழ்ந்துவிடும் என தகவல்கள் பரவியது. ஆனால், தற்போது இந்த பிரச்சினைக்கு தற்காலிக முடிவு ஏற்பட்டுள்ளது.