கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் மயானங்களின் பதிவின்படி அறிவிக்கப்பட்டதை விட 27 மடங்கு அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களும் பாதிக்கப்பட்டன.   குஜராத் மாநிலத்தில் அரசு அறிவிப்பின்படி குஜராத் மாநிலத்தில் 8.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 10,078 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8.15 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 184 பேர் சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை இதை விட மேலும் அதிகமாக இருக்கலாம் என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் குறை கூறி வருகின்றனர்.   பத்திரிகையாளர்கள் இதற்கு மயான பதிவுகளை ஆதாரமாக கூறுகின்றனர்.  குஜராத் மாநிலத்தில் உள்ள 170 நகராட்சிகளில் 68 நகராட்சிகளின் பதிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த 68 நகராட்சிகளில் சென்ற வருடத்தை விட 2020 மார்ச் முதல் 2021 ஏப்ரல் வரை 16,892 பேர் மரணம் அடைந்துள்ளதாக மயான பதிவுகள் தெரிவிக்கின்றன.   இந்த நகராட்சிகளில் மாநில மக்கள் தொகையான 6.03 கோடியில் 6% பேர் மட்டுமே வசிக்கின்றனர்.   இந்த விகிதப்படி கணக்கிட்டால்  மொத்த கொரோனா மரணம் 2.81 லட்சத்தை தாண்டும்.  அதாவது அறிவித்ததை போல் 27 மடங்கு இருக்கலாம் என கூறப்படுகிறது.