சென்னை
சென்னை நகரில் இரு சக்கர வாகனங்கள் தலைக்கவசம் அணிவது 72% இருந்து 86% ஆக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் பாதுகாப்புக்கு தலைக்கவசம் அணிவது அவசியம் என அரசு வலியுறுத்தியும் பலர் அணிவது இல்லை என்பதால் அது கட்டாயம் ஆக்கப்பட்டது. ஆயினும் பலர் தலைக்கவசம் அணிவதை ஏதாவது காரணம் கூறி மறுத்து வந்தனர். இதையொட்டி காவல்துறையினர் தீவிர முயற்சியால் தற்போது தலைக்கவசம் அணிவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், “கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 7 ஆம் தேதிவரை சென்னையில் விபத்துகளில் 659 பேர் உயிரிழந்துள்ளனர். 3,325 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 26 சதவீதம் (173) பேரும், காயம் அடைந்தவர்களில் 37 சதவீதம் (1214) பேரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள். அதைப் போல் இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 74 சதவீதம் (126) பேரும் காயமடைந்த 86 சதவீதம் (1056) பேரும் தலைக்கவசம் அணியவில்லை.
இதையொட்டி தலைக்கவசம் அணிவதை வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. ஆய்வில் இருசக்கர வாகன ஓட்டிகளில் 72 சதவீதம் பேர் மட்டுமே தலைக்கவசம் அணிகிறார்கள் என்பது தெரியவந்தது.
எனவே கடந்த மாதம் முழுவதும் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. விதிகளை மீறுபவர்கள் மீது அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காவல்துறையின் இந்த நடவடிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 3 லட்சத்து 58,548 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதில் 1 லட்சத்து 29,240 வழக்குகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது பதியப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையின் இந்த நடவடிக்கையால், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72லிருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு இருந்தால் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணிந்துள்ளார்கள் என்ற நிலை ஏற்படும்” என அறிவித்துள்ளார்.