சென்னை
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் மூன்று மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் அதிக அளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டன. குறிப்பாகச் சென்னை நகரில் சென்ற மாதம் அதாவது மே மாத இடையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7500 ஐயும் தாண்டியது. இதையொட்டி ஊரடங்கு விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. அதனால் கொரோனா பாதிப்பு நகரில் பெருமளவு குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த இரு வாரங்களாகத் தினசரி பாதிப்பு சராசரியாக 34% குறைந்துள்ளது. ஆனால் இந்த குறைவு அனைத்து மண்டலங்களிலும் ஏற்படவில்லை. பெரும்பாலான மண்டலங்களில் பாதிப்பு குறைந்த போதிலும் தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திரு வி க நகர் மண்டலங்களின் பாதிப்பு குறைவு மிகவும் கம்மியாகவே உள்ளது.
அதாவது தண்டையார்பேட்டையில் 8%, ராயபுரத்தில் 10% மற்றும் திரு வி க நகரில் 16% மட்டுமே தினசரி பாதிப்பில் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 25 முதல் 31 வரை இந்த 3 பகுதிகளில் சராசரியாகத் தினசரி பாதிப்பு 485 ஆக இருந்தது. ஜூன் 1 முதல் 7 வரையிலான கால கட்டத்தில் இது 429 ஆகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போதிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை நாங்கள் குறைக்கவில்லை. அது மட்டுமின்றி கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளையும் குறைக்காமல் தற்போது அதிகரித்துள்ளோம். மேலும் பல தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சோதனை மையங்கள் அமைக்கபட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.