கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் தீங்குகளுக்காக பிரிட்டனில் கிட்டத்தட்ட 14,000 பேர் இழப்பீடு கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.
பக்கவாதம், மாரடைப்பு, ஆபத்தான இரத்தக் கட்டிகள், முதுகுத் தண்டு அழற்சி, தடுப்பூசி போடப்பட்ட மூட்டு வீக்கம் மற்றும் முக முடக்குவாதம் உள்ளிட்ட நிலைமைகளுக்கு ஏற்கனவே பணம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் ‘தி டெலிகிராஃப்’ நாளிதழ் பெற்றுள்ள விவரங்களில் தெரியவந்துள்ளது.
இதில் 97 சதவீத இழப்பீடு அஸ்ட்ராஜெனிகா (AstraZeneca) தயாரிப்பு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளை பயன்படுத்தியவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு தடுப்பூசி சேத இழப்பீடு திட்டம் (Vaccine Damage Payment Scheme – VDPS) அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 16,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பாலானவை கோவிட் தடுப்பூசிக்கான இழப்பீடு கோரிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.
AstraZeneca தடுப்பூசிகள் குறித்து இரத்தம் உறைதல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் லாட்வியாவில் இந்த தடுப்பூசி மார்ச் 2021ல் நிறுத்தப்பட்டது.
இருந்தபோதும் தடுப்பூசி தீங்கு விளைவித்தது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று மருத்துவ மதிப்பீட்டாளர்கள் கருதுவதாகக் கூறிய பிரிட்டன் அரசு AstraZeneca தடுப்பூசியை தொடர்ந்து பரிந்துரைத்து வந்தது.
தற்போது சுமார் 14000 பேர் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் அதில் 5500க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. மேலும், மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறவு 519 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சுமார் 1000 பேர் தங்கள் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில் இதில் 12 பேரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை வெறும் 175 பேருக்கு மட்டும் இழப்பீடு வழங்கியுள்ள பிரிட்டன் அரசு ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ. 1.3 கோடி (£120,000) இழப்பீடாக வழங்கியுள்ளது.