பாட்னா

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட பின் 16 மாதங்களில் 68000 பேருக்கு மேற்பட்டோர் மது அருந்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஏப்ரல் மாதம் 2016 முதல் பீகாரில் மதுவிலக்கு முழுமையாக அமுல் படுத்தப்பட்டது.   இதையொட்டி கடந்த 16 மாதங்களில் , மாநிலம் முழுவதும் 388864  இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.  மொத்தமாக இந்த ரெய்டுகளில் 60232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   மது அருந்திய குற்றத்துக்காக 68579 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மது உற்பத்தியாளர்கள், ஏற்கனவே தங்களின் இருப்பில் உள்ள மது பாட்டில்களை  மாநிலத்தை விட்டு வெளியே சட்டபூர்வமாக எடுத்துச் செல்லப்பட்ட கெடு முடிந்துவிட்டபடியால், இனி இருக்கும் மது அனைத்தையும் அழிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.  இவை பீகார் அரசின் பீகார் ஸ்டேட் பெவெரேஜஸ் கார்பொரேஷன் லிமிடெட் குடோனில் உச்சநீதிமன்ற ஆணைப்படி வைக்கப்படுள்ளன.     இவைகளை உற்பத்தியாளர்கள் அழிக்கவில்லை எனில் அரசே அழித்துவிடும் என தெரிவித்துள்ளது.

பீகார் மாநில டிஜிபி தாக்குர் இது பற்றி தெரிவித்ததாவது :

”மொத்தத்தில் சட்ட விரோதமான மது விற்பனைக்கு உதவி செய்த மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்காத, மற்றும் மதுக்கடத்தலுக்கு துணை நின்ற 61 காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதில் 18 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் பதவிக் இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.    மீதி பேர் மேல் இன்னும் துறை வழக்கு நடந்துக் கொண்டு உள்ளது.

பீகார் மாநில எல்லையில் இருந்து இன்னும் புதிய புதிய முறைகளில் மது கடத்தப்பட்டு மாநிலத்தின் உள்ளே எடுத்துச்  செல்லப்படுகிறது.   போலீசார் ஒரு முறையைக் கண்டு பிடித்தால் மற்றொரு முறைக்கு மாறிவிடுகின்றனர்.   ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் சரி, போலீசின் கண்ணில் இருந்து தப்ப முடியாது

இந்த இரு மாதங்களில் மட்டும், இது வரை மது விற்ற குற்றத்தில் 1323 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  3567 பேர் மது கடத்தி வந்த குற்றத்திலும், 496 பேர்  சட்ட விரோதமாக மதுவை கையிருப்பு வைத்திருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.”  என கூறி உள்ளார்.