வுரங்காபாத்

வுரங்காபாத் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு ரேஷன் பொருட்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  ஆனால் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் குறைந்த விகிதத்தில் உள்ளனர்.  இதுவரை 55.12% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

சமீபத்தில் சுமார் 40 மாவட்ட ஆட்சியருடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது அவுரங்காபாத் ஆட்சியரிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் விகிதத்தை உயர்த்துமாறு அறிவுறுத்தினார்.  இந்நிலையில் அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதோருக்கு ரேஷன் பொருட்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.   எனவே ரேஷன் கடை நிர்வாகிகள், எரிவாயு வினியோகஸ்தர்கள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி சான்றிதழைப் பார்த்த பிறகே பொருட்களை வழங்க வேண்டும்.

தவிர உணவு விடுதிகள், உல்லாச விடுதிகள், சுற்றுலாப்பகுதிகளில் உள்ள கடைகள் ஆகியவற்றின் வாடிக்கையாளருக்கும் தடுப்பூசி போட்டுள்ளது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் விகிதத்தை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.