மும்பை,
வட மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளின் இறப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
உ.பி.யில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 55 குழந்தைகள் இறந்த தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாரதியஜனதா ஆண்டு வரும் உ.பி. மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதுபோல பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் 49 குழந்தைகள் உயிரிழந்ததும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சோகம் மறைவதற்குள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அரசு மருத்துவமனையிலும் அதிக அளவில் குழந்தைகள் இறந்துள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாசிக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போதுவரையில் மொத்தம் 187 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பரபரப்பான இந்த சோக சம்பவம் குறித்து கூறிய, அந்த அரசு மருத்துவமனையின் அதிகாரி டாக்டர் சுரேஷ் ஜகதாலே கூறும்போது, “இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அந்த குழந்தைகள் குணம் அடைவதற்கான வாய்ப்பு குறைவு என்ற நிலையில்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப் பட்டார்கள்.
இதில் பல குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள், மேலும்க, நுரையீரல் பலவீனமான குழந்தைகளும் இறந்துள்ளனர்” என கூறினார்.
இந்த மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 100க்கு 30 சதவிகிதம் அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
வட மாநிலங்களில் குழந்தைகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.