சண்டிகர்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் விஜய் ரூபனி பேசுகையில்,‘‘ இஸ்ரோவின் ஏவுகணைகள் அனைத்தும் ராமரின் அம்புகளை அடிப்படையாக கொண்டது என்றும், கட்டுமானங்கள் அனைத்தும் ஹனுமானின் தொழில்நுட்பம் என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இவரை தொடர்ந்து தற்போது துணை ஜனாதிபதியான வெங்கைய நாயுடு, ‘‘பெண் தெய்வங்களான துர்கா தான் பாதுகாப்பு துறை அமைச்சர், லட்சுமி நிதியமைச்சர்’’ என்று பேசியுள்ளார்.

மொஹாலியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸில் நடந்த தலைமை பண்புகுறித்த மாநாட்டை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘பழங்கால இந்தியாவில் பெண் தெய்வமான துர்கா தான் பாதுகாப்பு துறை அமைச்சர். லட்சுமி தான் நிதியமைச்சர்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘மற்றவர்களுக்கு உங்கள் தாய்மொழி தெரியாத சமயத்தில் மட்டுமே இதர மொழிகளில் பேச வேண்டும். நம் நாட்டின் வரலாற்றில் ராம் ராஜ்யம் சிறந்த ஆட்சிக்கான உதாரணமாக இருப்பதால் தற்போதும் அது நிலைத்து நிற்கிறது. ஆனால், இதை பற்றி தற்போது பேசினால் மத சாயம் பூசப்படுகிறது. தற்போது துணை ஜனாதிபதியாக இருப்பதால் என்னால் மனப்பூர்வமாக பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனப்பூர்வமாக பேச விலை என்றால், அது என் மனதுக்குள்ளே பெரிதாகி எனது உடல் நலத்தை பாதிக்கும்.

நாட்டில் தற்போது சகிப்புத்தன்மை இன்மை வளர்ச்சியும், பேச்சு சுதந்திரமும் இல்லை என்று சிலர் விவாதி க்கின்றனர். சிலர் அப்சல் குரு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஜனநாயகத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. ஆனால் இந்த கருத்துக்கள் நமது அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். கருத்துக்களை தெரிவிக்கவும், பேச்சு சுதந்திரத்திற்கும் ஒரு அளவுகோள் இருக்க வேண்டும்’’ என்றார்.

நாயுடு தொடர்ந்து பேசுகையில், ‘‘ஜனநாயகம் செயல்பட சில விதிமுறை இருக்க வேண்டும். தனி மனிதனின் மரியாதை முக்கியம் தான். அதே சமயம் நாட்டின் ஒருமைப்பாட்டை இது மீறக்கூடாது. நமது அரசியலமைப்பில் ஒருவர் ஒரு மதத்தை பின்பற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதி, சமய, மதங்களுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறது.

அதேசமயம் மதசார்பின்மை இந்தியாவில் வலுவான நிலையில் உள்ளது. இது அரசியலமைப்பால் உருவானது கிடையாது. இந்தியர்களின் மரபணு மூலம் உருவானது. அதனால் சகிப்புதன்மை இன்மை வளர்ச்சி என்பதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால், நான் சோர்வு அடையவில்லை’’ என்றார்.

இந்த விழாவில் விமான போக்கவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா, ஹீரோ கார்ப்பரேட் சர்வீஸ் நிறுவன தலைவர் சுனில் கந்த் முஞ்சல், பஞ்சாப் சுகாதார அமைச்சர் பிரகம் மொகிந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.