அமராவதி:

ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக போராட்டம், பேரணி நடத்துவதாக தெலுங்குதேசம் கட்சி அறிவித்திருந்த நிலையில், முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது மகன் ஆகியோரை ஜெகன் மோகன் ரெட்டி அரசு வீட்டுச்சிறையில் அடைத்து வைத்துள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் ஜெகன் அரசு, சந்திரபாபு நாயுடுவின் அமராவதி திட்டம் உள்பட பல திட்டங்களை கைவிடுவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஜெகன் அரசுக்கு எதிராகவும்,   ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் புகார் கூறியுள்ள தெலுங்குதேசம் கட்சி, மாநில அரசுக்கு எதிராக இன்று உண்ணா விரதம் போராட்டம் மற்றும் பேரணி நடத்த தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் காரணமாக ஆந்திராவில் பல இடங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில்,  குண்டூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சியின் பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும்,  தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் ஆகியோரையும் காவல்துறையினர், வீட்டைவிட்டு வெளியேற முடியாத படி,  வீட்டுக் காவலில் சிறை வைத்துள்ளனர். வீட்டின் முன்பு கயிறு கட்டி,  வீட்டைச் சுற்றி  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை கேள்விப்பட்ட தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள், சந்திரபாபு நாயுடுவின் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

பல இடங்களில் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், நரசராவ்பேட்டா, சட்டனபள்ளி, பல்நாடு மற்றும் குராஜாலா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஆந்திராவில் பரபரப்பு நிலவி வருகிறது.