ராஞ்சி:
மாட்டு இறைச்சி விவகாரத்தில் இஸ்லாமியரை கொலை செய்த வழக்கில் பசு பாதுகாவலர்கள் 11 பேர் குற்றவாளிகள் என ஜார்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்த அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி என்பவர் ராம்கார் பகுதியில் மர்ம கும்பலால் தாக்கப்பட்டு இறந்தார். ஆனால், அவர் 200 கிலோ ஆட்டு இறைச்சியை தான் வேனில் கொண்டு சென்றது பின்னர் தெரியவந்தது. அவரது வேனும் தீயிட்டு எரிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதி பாஜக தலைவர் நித்யானந்த் மகத்தோ உள்பட 11 பசு பாதுகாவலர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறியது. தீர்ப்பு விபரம் வரும் 20ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட வன்முறை சம்பங்களில் பலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாக தற்போது நாட்டிலேயே முதன்முறையாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.