பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரின் குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் புதிதாக திறக்கப்பட இருந்த மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அந்நாட்டு மக்கள் உள்ளே புகுந்து அள்ளிச் சென்றனர்.

வெளிநாட்டில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானிய தொழிலதிபர் ‘ட்ரீம் பஜார்’ என்ற பெயரில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய புதிதாக மால் ஒன்றை திறக்க திட்டமிட்டிருந்தார்.

இதன் திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த நினைத்த அவர் ஏராளமான திறப்பு விழா சலுகைகளை அறிவித்திருந்தார்.

இதனால் தனது மாலுக்கு மக்களை கவர திட்டமிட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் திறப்பு விழா சலுகையில் பொருட்களை வாங்க குவிந்தனர்.

இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த செக்யூரிட்டிகள் முயன்ற நிலையில் அவர்களை இடித்துத் தள்ளிவிட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

தங்களுக்கு வேண்டியதை அள்ளிச் சென்ற இவர்கள் அதற்கு பணம் கொடுக்காமல் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. தவிர இந்த தள்ளு முள்ளில் மாலின் கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த அந்த சாலையில் போவோர் வருவோரும் தங்கள் பங்கிற்கு வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து மாலில் மிச்சம் மீதி இருந்ததை திருடிச் சென்றனர்.

இதனால் அந்தப் பகுதியே கலவரமாக மாறியதை அடுத்து போலீசார் வந்து அவர்களை விரட்டி அடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.