டில்லி

ன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  உலக நாடுகள் அனைத்திலும் இதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது ஊரடங்கு, சோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் பாஜக மூத்த தலைவர் நரசிம்ம ராவுடன் கொரோனா குறித்து சமூக வலைத் தளத்தில் உரையாடலை நிகழ்த்தினார்.

அப்போது அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சுமார்100 தடுப்பூசி மருந்துகள் வெவ்வேறு சோதனை கட்டங்களில் உள்ளன.  இதுவரை இந்தியாவில் 14 தடுப்பூசி மருந்துகள் பரிந்துரை கட்டத்தில் உள்ளன.  அவற்றில் 4 மருந்துகள் இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டி விடும்.

கொரோனாவுகு தடுப்பூசி மருந்து உருவாக்குவது நீண்ட கால பணி என்பதால் உடனடியாக தடுப்பூசியை எதிர்பார்க்கமுடியாது.   ஒரு வியாதிக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும்.  ஆகவே தடுப்பூசி கண்டுபிடிப்பது வரை சமூக விலகல், முகக் கவசம் அணிதல், சுகாதார நடவடிக்கைகள் ஆகியவையே கொரொனாவுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.