2020ல் 'வாஹனா' குட்டி விமானத்தில் 'ஹாயாக' பறக்கலாம்!

Must read

சான்பிரான்சிஸ்கோ,
2020ல் விற்பனைக்கு வரும் ‘வாஹனா’  என்ற குட்டி விமானத்தில் நெரிசல் மிகுந்த நகரங்களிலும் ‘ஹாயாக’ பறக்கலாம்
அமெரிக்காவில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நகரம்  சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் பகுதியாகும். இங்கு அனைத்து வகையான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ கடற்கரை பகுதியாகும்.
சர்வதேச அளவில், வாகனங்கள் அதிகரிப்பால் பெரிய நகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. ‘பீக் அவர்’ நேரங்களில் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ஒன்றை (ஏர் டாக்சி), பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனம், விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த குட்டி விமானத்திற்கு ‘வாஹனா’ என்று ஏர்பஸ் பெயரிட்டுள்ளது.
vahana
வாஹனா என்பது சமஸ்கிருத வார்த்தை. இந்து தெய்வங்களுக்கு வாகனம் உண்டு. அதை குறிப்பிடும் வகையில், இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. குட்டி விமானம் என்று குறிப்பிட்டாலும், வாஹனா, கிட்டத்தட்ட ஒரு ஹெலிகாப்டர் போல வடிமைப்பிலும், இயக்கத்திலும் காணப்படுகிறது.
முதற்கட்ட வடிவமைப்பில், ஒரு நபர் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் தயாராகி வரும் வாஹனா, எதிர்காலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என ஏர்பஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பைக் போன்ற முன்புற வடிவத்தை கொண்ட வாஹனா, பிளாஸ்டிக் மேற்கூரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மழை, வெயில் மற்றும் காற்றின் வீச்சிலிருந்து விமான ஓட்டியை பாதுகாக்கும்.
இந்த குட்டி விமானம் ஏறி, இறங்குவதற்கு ஓடுதளம் தேவையில்லை. நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பும் (ஹெலிகாப்டர் இயங்குவது போல). இதனால், தேவைப்படும் இடத்தில் விமானத்தை இறக்கிக் கொள்ளலாம்.
தரையில் லேண்டிங் ஆனவுடன், இறக்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால், பார்க்கிங் இடப் பிரச்னை இருக்காது.
அனைத்து சோதனைகளும் முடிவடைந்து, அடுத்த ஆண்டு இறுதிக்குள் வாஹனா தயாராகும் என்று கூறி உள்ள ஏர் பஸ் நிறுவனம், வரும் 2020ம் ஆண்டு முழு அளவில் விற்பனைக்கு வரும் என்று கூறி உள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் வாஹனா தயாரிப்பு துவங்கியது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர், வடிவமைப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வாஹனாவை வாங்க பல நிறுவனங்கள் இப்போதிருந்தே போட்டி போட்டு வருகின்றன.
தங்களின் புதிய தயாரிப்பான வாஹனா குறித்து ஏர்பஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வாகன நெரிசல் மிகுந்த நகரங்களில், வாஹனா ஏர்டாக்சி ஒரு வரப்பிரசாதமாகும்.
தற்போது ஒருநபர் செல்லும் வகையில் வாஹனா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், கார்கோவையும் ஏற்றிச் செல்லலாம். அடுத்த கட்டமாக, கூடுதல் பயணிகள் செல்லும் வகையில் வாஹனா வடிவமைக்கப்படும்,’ என்றார்.
பொதுவாக விமானங்களை இயக்க பைலட் பயிற்சி கட்டாயம். பைலட் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இந்த ஏர் டாக்சியை பயன்படுத்த முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் வகையில் இந்த குட்டி விமானம் தயாரிக்கப்படும் போது, பைலட்டுகளை (காருக்கு டிரைவர் வைத்துக் கொள்வது போல) பயன்படுத்திக் கொள்ளலாம்.
நகரங்களில் ஒரு இடத்தில் இருந்து மிக குறைந்த நேரத்தில் மற்றொரு இடத்திற்கு செல்லவும், அவசிய மருந்துகளை அவசரமாக கொண்டு செல்லவும், ஒரு நகரத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு நகரத்திற்கு செல்லவும் இந்த வாஹனா ஏர் டாக்சி பயன்படும்.
இந்நிலையில், ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்புக்கு சமஸ்கிருத மொழியில், ‘வாஹனா’ என்று பெயரிட்டுள்ளதற்கு, சர்வதேச இந்து இயக்க தலைவர் ராஜன் ஜெட் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article