திருவனந்தபுரம்

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தெருவில் எலுமிச்சை சாறு விற்ற பெண் தற்போது காவல்துறை அதிகாரியாகி சாதனை புரிந்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் கஞ்சிரம்குளம் பகுதியில் கே என் எம் அரசு கல்லூரி அமைந்துள்ளது.  இங்கு அனி சிவா என்னும் 18 வயது பெண் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.  இவர் அப்போது ஒரு இளைஞரைக் காதலித்துப் பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி காதலரைத் திருமணம் புரிந்தார்.

ஓராண்டில் அனி யை அவரது கணவர் கைவிட்டு விட்டார்.   பெற்றோரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.   எனவே தனது 6 மாத குழந்தையுடன் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.   ஆயினும் தனது முயற்சியைக் கைவிடாமல் வர்கலா என்னும் சுற்றுலாத் தளத்தில் தெருக்களில் எலுமிச்சை சாறு, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்து  அனி அதில் கிடைக்கும் பணத்தில் படிப்பை முடித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அனி காவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.   அதன் பிறகு அவர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.  தற்போது அவர் எலுமிச்சை சாறு விற்ற அதே வர்கலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வருகிறார்.   தற்போது 31 வயதாகும் அனி சிவா தனது கண்ணீர் கதையைச் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

அவர், “தற்போது வர்கலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வருகிறேன்.  ஆனால் இதே ஊரில் என்னை ஆதரிப்போர் இல்லாமல் கைக்குழந்தையுடன் கண்ணீரில் மூழ்கி வாழ்ந்துள்ளேன்.   நான் இதே ஊரில் எலுமிச்சை சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தெருவில் அலைந்து விற்று எனது படிப்பை முடித்தேன்” எனக் கண்ணீருடன் கூறி உள்ளார்.