ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு அத்தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

சென்ற வாரம் சமூக சேவகரும், எதி அறக்கட்டளைத் தலைவருமான ஃபைசல் எதி, இம்ரான்கானை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

இந்நிலையில் ஃபைசல் எதிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதனடிப்படையில் பிரதமர் இம்ரானின் இரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தினர். தற்போது வெளிவந்துள்ள மருத்துவ ஆய்வு முடிவுகளின்படி இம்ரானுக்கு கொரோனாத் தொற்று இல்லை என நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெளிவு படுத்தியுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட சில உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் இம்ரானின் கொரோனா பரிசோதனை முடிவை ஆசிய நாடுகள் பதற்றமுடன் கவனித்து வந்தன.

பாகிஸ்தானில் தற்போது வரை 10 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.