இஸ்லாமாபாத்: தனது அமெரிக்க பயணத்தின்போது, விலையுயர்ந்த ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் தூதரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தங்கிக்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எடுத்த முடிவு அமெரிக்காவில் வரவேற்பை பெறவில்லை.
தூதரின் இல்லத்திலேயே தங்கிக்கொள்வதன் மூலம், தேவையற்ற செலவினங்கள் குறையும் என்பது இம்ரான்கானின் திட்டம். ஆனால், வாஷிங்டன் நகர நிர்வாகமும், அமெரிக்க ரகசிய ஏஜென்சியும் இம்ரான்கானின் இந்த திட்டத்தை வரவேற்கவில்லை.
அமெரிக்காவிற்கு, குறிப்பாக தலைநகரான வாஷிங்டன் நகருக்கு, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உலகத் தலைவர்கள் வருகை தருகிறார்கள். எனவே, அவர்களின் வருகை, எந்தவகையிலும் வாஷிங்டன் நகரின் இயல்பு வாழ்க்கை பாதித்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்க நிர்வாகம் கவனம் செலுத்துவது வாடிக்கை. மேலும், அந்த தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும் அதிக அக்கறை காட்டப்படுகிறது.
பாகிஸ்தானின் தூதரகம் வாஷிங்டனின் மிக முக்கியமான, அதேசமயத்தில் சற்று நெருக்கடியான பகுதியிலும் அமைந்துள்ளது. எனவே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இந்த முடிவு தேவையற்ற நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், அவரின் இந்த திட்டத்திற்கு அமெரிக்கா தரப்பில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.