இஸ்லாமாபாத்
ஏழ்மையை ஒழிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதிய திட்டம் ஒன்றை அமைக்க உள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை மிகவும் சரிந்துள்ளது. நாடெங்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை தாறுமாறாக மேலேறி உள்ளது. சாதாரண மக்கள் இதனால் கடும் துயருற்று வருகின்றனர். அதே நேரத்தில் வருமானக் குறைவால் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் மிகவும் அதிகரித்துள்ளனர். இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் அரசு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார். அந்த நிகழ்வில் இம்ரான் கான், “நாட்டில் ஏழ்மை மிகவும் அதிகரித்துள்ளது. அந்த ஏழ்மையை போக்க அரசு பல துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக ’எகசாஸ்’ என்னும் திட்டம் ஒன்றை அமைக்க உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் படியாக பாகிஸ்தான் அர்சியலமைப்பு சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளாக உணவு, உடை, இருப்பிடம் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் சேர்க்கப்பட உள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்டால் அதை அளிக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாக மாறும். மற்றும் அதை அளிக்காத அரசு மீது மக்கள் வழக்கு தொடரவும் வகை செய்யும்.
இந்த திட்டத்தில் ஏழை மக்கள் மேம்பாட்டுக்காக இந்த அரசு ரூ.8000 கோடி செலவு செய்ய உள்ளது. இந்த தொகை அடுத்த வருடம் 12,000 கோடியாக அதிகரிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள சமுதாய மேம்பாட்டு திட்டங்களில் உள்ளவர்கள் இணைக்கப்பட்டு அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும்.
வீடற்ற மக்களுக்கு அடிப்படை குடியிருப்புக்கள் அமைத்து தரப்படும். அத்துடன் 57 லட்சம் பெண்களுக்கு மொபைல் போன் வழங்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கபடும். நீதிமன்ற வழக்கால் தவிக்கும் ஏழைகளுக்கு வழக்குச் செலவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
நிலமற்ற விவசாயிகளுக்கு விளைநிலம் வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான வருவாயை பெற வசதி செய்து தரப்படும். இந்த திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் அனைத்து அமைச்சரவையும் இணைக்கப்படும். மாற்றுப் பாலினத்தவர், குழந்தைகள், தினக்கூலி பெறுவோர், கொத்தடிமைகள் ஆகியோருக்கு இந்த எகசாஸ் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். முதியோர் உதவித் தொகை மாதத்துக்கு ரூ.5000 ஆக இருந்தது இனி ரூ.6500 ஆக மாற்றப்படும்.
ஏழை வியாபாரிகளுக்கு சொந்தமாக வர்த்தகம் தொடங்க பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். மற்றும் மாணவர்களின் கல்வி வசதிக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும். வெளிநாட்டுப் பணிக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். ” என தெரிவித்துள்ளார்.