ஸ்லாமாபாத்

காஷ்மீர் விவகாரத்தில் தங்களுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளித்து  வந்த சிறப்புச் சலுகைகளை இந்திய அரசு ரத்து செய்தது.   அத்துடன் அம்மாநிலம் இரு  யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட உள்ளது.    இதையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் பல தடைகள் விதித்துள்ளன.   குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.    மாநிலம் முழுவதும் மொபைல் மற்றும் இணையம் முடக்கப்பட்டுள்ளது.

இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.   காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு இந்தியா அவர்களைக் கொடுமைப் படுத்துவதாகப் புகார் எழுப்பியது.   அத்துடன் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பாக் கோரியது.   முதலில் ஆர்வம் காட்டிய அமெரிக்கா அதன்பிறகு விலகிக் கொண்டது.   ஐநா பாதுகாப்புக் குழுவும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஐநா சபையின் மனித உரிமைக் குழுவின் கூட்டம் நடந்தது.  இதில் காஷ்மீரைக் குறித்து பாகிஸ்தான் அளித்த புகாரை இந்திய அரசு மறுத்துள்ளது.   இந்தியாவின் சார்பில், “பாகிஸ்தானின் புகாரில்  காஷ்மீர் நிலைமை தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை உலக நாடுகளின் பயங்கரவாத மையமான எல்லை தாண்டிய  பயங்கரவாதத்தை நடத்தும் நாடு தெரிவித்துள்ளது.   காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதம் தலை தூக்க முடியாதபடி இந்தியா நடவடிக்கை எடுப்பதால் அந்நாடு இவ்வாறு புகார் அளிக்கிறது” எனத் தெரிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் தனது டிவிட்டரில்,  “காஷ்மீர் மீது இந்தியா நடத்தி வரும் பலப் பிரயோகம்,  கட்டுப்பாடு ஆகியவற்றை நிறுத்தி காஷ்மீர் மக்களின் உரிமையை  நிலை நிறுத்த வேண்டும் என்னும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு 58 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.” எனப் பதிந்துள்ளார்

அதற்கடுத்த அவரது டிவிட்டர் பதிவில் ”காஷ்மீர் விவகாரத்தில் சட்டப்படி இரு  நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் உருவாக்க வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்த நாடுகளின் கருத்தை நான் வரவேற்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.