பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழங்கில் 4ஆண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, அங்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
“சிறையில் இருந்தபோது வி.கே.சசிகலாவுக்கு படுக்கை, தனி சமையல்” என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, இந்த வழக்கில் அவர் மீண்டும் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைக்காலத்திற்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆகி வெளியே வந்தார். தமிழ்நாட்டின் அரசியலை கலக்கப்போவதாக கூறிய நிலையில், தொண்டர்களின் ஆதரவு கிடைக்காததாலும், ஏற்கனவே உள்ள பல்வேறு வழக்குகள் காரணமாகவும், செய்வதறியாது திகைத்துபோய் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் சிறையில் இருந்தபோது, சிறையில் சொகுசாக இருப்பதற்காக பெங்களூரு சிறைத்துறை டி.ஜிபி சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அப்போதைய சிறைத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ரூபா புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இதுதொடர்பாக அப்போதைய மாநில அரசு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த குழுவினர் பலகட்ட விசாரணை நடத்தியதில், சசிகலா,இளவரசி ஆகியோர் முறைகேடாக சிறையில் சிறப்புச் சலுகைகளைப் பெற்றது உண்மைதான் என்பதை கண்டறிந்து உள்ளனர். இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா,இளவரசி ஆகியோர் மற்றும் லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக கர்நாடகா ஊழல் தடுப்பு படை காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில், “சசிகலா மற்ற குற்றவாளிகளிடம் இருந்து தனித்து சிறையில் வைக்கப்பட்டிருந்தது உண்மைதான் என்றும், ஐந்து சிறைகளுடன் கூடிய பெண்கள் பிரிவு அவருக்கு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அவருக்கு உணவு தயாரிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். அவரை சந்திக்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மேலும், ஒரு கட்டில் மற்றும் படுக்கை அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் கிருஷ்ண குமார் அறிந்திருந்தும், உயர் அதிகாரிகளிடமோ அல்லது அரசிடமோ அவர் தெரிவிக்கவில்லை என்று கூறியிருப்ப துடன், . அப்போதைய சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி எச்.என் சத்தியநாராயண ராவ் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சசிகலா விரைவில் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.