நவி மும்பை
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வருடம் காலம் தவறிப் பெய்த கடுமையான பருவ மழையால் வெங்காயப் பயிர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவில் அதிக அளவில் வெங்காயம் பயிராகும் நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் வெங்காயப் பயிர் முழுவதுமாக வெள்ளத்தால் அழிந்தது. அதனால் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நாட்டின் பெரு நகரங்களில் உள்ள மொத்தச் சந்தையில் வெங்காயம் விலை 100 கிலோவுக்கு ரூ9000 ஐ எட்டியது. சில்லறை விலையில் கிலோ ரூ.150 முதல் ரூ. 170 வரை விற்கப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யத் தொடங்கியது. அப்போதே வெங்காய விலை குறைந்த போதிலும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசு இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.
நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக கோடவுன்களில் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் வாங்குவார் இன்றி அழுகத் தொடங்கி உள்ளது. தற்போது நாட்டில் வெங்காய உற்பத்தி அதிகரித்து மொத்த சந்தைகளில் 100 கிலோ ரூ. 1780க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மகாராஷ்டிராவில் நாசிக் பகுதியில் பிப்ரவரி மாதம் 9 அம் தேதி விற்கப்படும் விலை ஆகும்.
எனவே மத்திய அரசின் தேசிய வேளன் பொருட்கள் விற்பனை அமைப்பு துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க யாரும் முன் வரவில்லை. எனவே இந்த வெங்காயம் தற்போது மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியாருக்குக் கிலோ ரூ.10 என விற்கப்படுகிறது.
அத்துடன் தற்போது துறைமுகத்தில் உள்ள 10000 டன் துருக்கி வெங்காயம் ‘உள்ளது உள்ளபடி’ அடிப்படையில் விற்க டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அதாவது இந்த வெங்காயம் தரத்துக்கு எவ்வித உத்தரவாதமும் இன்றி விற்பனை செய்யப்பட உள்ளன. கடந்த 5 ஆம் தேதி கோரப்பட்ட இந்த டெண்டருக்கு இதுவரை யாரும் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
துருக்கி வெங்காயத்தை மாநில அரசுகளுக்குக் கிலோ ரூ.10 என மத்திய அரசு விற்பனை செய்வதால் வெங்காய விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.