சென்னை: தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமியும், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைகளில், தேர்தல் செலவிற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டுமென்று சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்களின் சார்பாக தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
இதனையடுத்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாம். மாநில தேர்தல் ஆணைய செயலளாராக புதிதாக நியமனம் செய்யப்பட்ட சுப்பிரமணியம் உள்ளிட்ட இதர முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டத்திலேயே, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் அந்த தகவலை அறிவிக்கும் தேதி போன்றவை இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் நவம்பர் 24ம் தேதி வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.