டில்லி
மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி அன்று இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி உள்ளார்.
அவர் தனது உரையில் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதிலும் ஊரடங்கிலும் ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். மேலும் ஒரு வைரசால் உலகே தவிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்திய மக்களின் பொறுமையை மிகவும் அவர் புகழ்ந்தார். மேலும் அவர் பேசியதன் முக்கிய விவரங்கள் வருமாறு
அவர் தனது உரையில் ”ஆத்ம நிர்பார் பாரத் அதாவது சுய நம்பிக்கை உள்ள இந்தியா தனது எண்ணத்தை நிறைவேற்றி தனது இலக்கை அடையும் . நம்மைப் பொறுத்த வரை சாத்தியமில்லாதது என எதுவும் கிடையாது. இந்தியாவில் நல்ல திறமையும் தொழில் நுட்பமும் உள்ளதால் நாம் மிக பிரம்மாண்டமான முன்னேற்றம் அடைவோம்.
சுய நம்பிக்கை உள்ள இந்தியா என்பது ஐந்து தூண்களைக் கொண்டது
இதில் முதலாவது பொருளாதாரம், ஆகும். நமது பொருளாதாரம் தற்போது மிக வேகமாக முன்னேறும் நிலையில் உள்ளது.
அடுத்தது உள்கட்டமைப்பு, ஆகும். நமது உள்கட்டமைப்பு ஒரு தனித்தன்மை வாய்ந்தது
மூன்றாவது அமைப்பு – நம்முடைய அமைப்பு 21 ஆம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது.
நான்காவது குடியமைப்பு – உலகின் மிகச் சிறந்த குடியரசு நாடாக நமது நாடு உள்ளது.
ஐந்தாவது தூண் தேவை ஆகும். தேவை மற்றும் விநியோக சங்கிலியை மேம்படுத்த நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். நமது விநியோக சங்கிலி இந்திய முறைப்படியும் நமது தொழிலாளர்களின் உழைப்பு வியர்வை வாசனையாலும் மேம்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவின் முன்னேற்றத்துக்காக ஆர்த்திக் பாக்கேஜ் என்னும் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரண உதவியின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் மதிப்பிலானது. இது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 10% ஆகும்.
இந்த 20 லட்சம் கோடியானது 2020 ஆம் ஆண்டுக்கு ஒரு புதிய வேகத்தை அளிக்கும். இந்த உதவியால் தொழிலாளர்கள், விவசாயிகள், வரி செலுத்தும் நடுத்தர ம்க்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். இந்த பாக்கேஜ் குறித்து விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரமாக விளக்குவார்.
ஊரடங்கு நான்காம் முறையாக நீட்டிக்கப்படும் அப்போது அது ஒரு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது குறித்த விவரங்கள் வரும் 18 ஆம் தேடி அறிவிக்கப்படும்”
எனத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.