சென்னை:
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான புகார்கள் புற்றீசல் போல வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் உள்பட எஸ்ஆர்எம் மற்றும் கோவை தனியர் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரிய வந்த நிலையில், தற்போது சவீதா மருத்துவக்கல்லூரியிலும் படிக்கும் மாணவி ஒருவர், தனது தாயுடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவங்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழை மக்கள் பயன்பெற நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் கூறி வரும் நிலையில், பணம் படைத்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ சேர்க்கையில் இடம்பிடித்து வந்துள்ள அவலம் அரங்கேறி உள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து புற்றீசல் போல அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து,. மாணவ்ரகள், பிரவீன், சரவணன், இர்பான் ஆகிய மூன்று மாணவர்களும், அவர்களது தந்தையர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் சவிதா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நடத்திய 3 மணி நேர விசாரணயை அடுத்து, பிரியங்காவையும், அவரது தாய் மைனாவதியை யும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்துள்ளதால், அவர்கள்மீது, சதித் திட்டம் தீட்டுதல், போலி ஆவணம் தயாரித்தல், ஆள்மாறாட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.