கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி,  பா.ஜனதா – காங்கிரஸ். இடையே கள்ள உறவு  காரணமாகவே திரிணாமுல் கட்சி தோல்வி அடைந்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

,இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, மேற்குவங்கத்தில் நேர்மையான தேர்தல் நடத்தால், திரிணாமுல் காங்கிரசை எளிதில் வீழ்த்த முடியும் என தெரிவித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில்  3வது முறையாக ஆட்சி நடத்தி வருகிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. அங்கு கடந்த 12 ஆண்டுகளில் நடைபெற்ற எந்தவொரு இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்திக்காத திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற சாகர்டிகி  தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.

மம்தா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த  சுப்ரதா சஹா கடந்த (2022) டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.  அதையடுத்து அவரது தொகுதியான  முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதிக்கு கடந்த 27-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேபாஷிஷ் பானர்ஜியும், பா.ஜனதா சார்பில் திலீப் சஹாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக பேரோன் பிஸ்வாசும் போட்டியிட்டனர்.

இங்கு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்,  தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் பேரோன் பிஸ்வாஸ் முன்னிலையில் இருந்தார். இறுதியில், அவர் 22 ஆயிரத்து 980 ஓட்டுகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். பா.ஜனதா வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றிபெறாத நிலையில், தற்போது வெற்றிபெற்றது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க மாநில முதலமைச்ச்ர மம்தா பானர்ஜி, சாகர்டிகி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக யார் மீதும் நான் பழி சுமத்த விரும்பவில்லை. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் மாறிமாறி வரும். ஆனால், இந்த தேர்தலில், பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு நிலவியது. பா.ஜனதா தனது ஓட்டுகளை காங்கிரசுக்கு மடைமாற்றம் செய்துள்ளது.  அதை நாங்கள் கண்டிக்கிறோம்.

பா.ஜனதாவின் ஆதரவை கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி, இனிமேல் தன்னை ‘பா.ஜனதாவுக்கு எதிரான கட்சி’ என்று சொல்லிக் கொள்ளக் கூடாது.

2024-ம் ஆண்டு பாராாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். மக்கள் ஆதரவை மட்டும் பெற்று போட்டியிடுவோம். பாரதிய ஜனதாவை தோற்கடிக்க விரும்பும் அனைவரும் எங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய படைகள் இருந்ததால் நேர்மையான தேர்தல் நடத்துவது சாத்தியமானது. ஜனநாயக சக்திகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால், மம்தா பானர்ஜியை எளிதாக வீழ்த்த முடியும் என தெரிவித்தார்.

மேற்குவங்கு மாநிலத்தில் 51ஆண்டுகளுக்கு பிறகு சாகர்திகியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!