சென்னை

திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ரோமானிய நாட்டை சேர்ந்த நெகொய்டா ஸ்டீபன் மார்லஸுக்கு மத்திய அரசு நோட்டிஸ் விடுத்துள்ளது.

 

ரோமானிய நாட்டை சேர்ந்த நெகோய்டா ஸ்டீபன் மார்லஸ் என்பவர் வியாபார விஷயமாக தற்போது கோவை வந்துள்ளார்.  இவர் திமுக அரசின் திட்டமான மகளிருக்கு பேருந்து கட்டண விலக்கை வெகுவாக பாராட்டி உள்ளார்.  இதையொட்டி அவர் திமுகவுக்கு ஆதரவாகக் கோவை நகரில் பிரசாரம் செய்யத் தொடங்கி உள்ளார்.  இவரது பிரசார வீடியோ வைரலாகி உள்ளது.

இந்நிலையில்  இவருக்கு மத்திய அரசின் குடியேற்றப் பிரிவில் இருந்து ஒரு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட இந்த நோட்டீசில்

”ரோமானிய நாட்டை சேர்ந்த நெகோய்டா ஸ்டீஃபன் மாரலஸ் ஆகிய நீங்கள் வியாபார விசா மூலம் வந்து அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  இது உங்கள் விசாவுக்கான அனுமதிக்கு மாறானது மற்றும் விசா விதிகள் மீறலாகும்.

எனவே நீங்கள் சென்னை ஹாடோஸ் சாலையில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்துக்கு வரும் 18 ஆம் தேதி அன்று மதியம் உங்களுடைய அசல் ஆவணங்கள் மற்றும் இதற்கான விளக்கங்களுடன் ஆஜராக வேண்டும்.

மேலே குறிப்பிட்ட படி நீங்கள் ஆஜராகாவிடில் உங்கள் மீது 1946 வெளிநாட்டினர் விதிகள் 14 ஆம் பிரிவின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.