சிறப்புக்கட்டுரை : எச்.பீர்முஹம்மது
இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான உடனடி முத்தலாக் (Instant Triple Talaq) சட்டவிரோதம் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் இதனை தடுக்கும் விதத்தில் மத்திய அரசு ஆறு மாதங்களில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி மோடி அரசு உடனடி முத்தலாக் என்பதை தடுக்கும் வகையில் இதனை கிரிமினல் குற்றமாக கருதி தனிச்சட்டம் (முஸ்லிம் பெண்கள் திருமண சட்டம் 2017) கொண்டு வந்திருக்கிறது.
உண்மையில் இந்த சட்டம் இந்திய முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகால முறையில் நன்மை அளிக்குமா என்பது அமலான பிறகு தான் நாம் அறிய முடியும். ஆனால் சபரிமலையில் இன்னமும் பெண்களின் நுழைவு தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில் அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசு இதனை கொண்டு வருவதன் நோக்கம் என்னவென்று ஒருவிதமான குரல்கள் ஒலிக்கின்றன. ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் இந்த குரல்கள் வேறு மாதிரி ஒலித்திருக்கும். இப்போதும், இந்த நிலையிலும் மோடி தான் பிரச்சினையே.
அதை நீக்கி விட்டு பார்த்தால் சட்டத்திற்கான தேவை இருப்பதாகவே நாம் கருத வேண்டியதிருக்கிறது. மேலும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
இந்தியாவில் இந்து, கிறிஸ்தவ, பார்சி, ஜைன, சீக்கிய, இஸ்லாமிய மதம் சார்ந்த சிவில் விவகாரங்களுக்கென தனித்தனி சட்டங்கள் உள்ளன. இவை அனைத்துமே அவரவர் மத சுதந்திரம் சம்பந்தப்பட்டவை. அரசு இதில் தலையிடாது. ஆனால் நம் அரசமைப்பு சட்டம் பிரிவு 25 மத சுதந்திரத்தையும், அதற்கான சிவில் தனியார் சட்டங்களையும் அனுமதிப்பதுடன், அது அடிப்படை மனித உரிமைகளுக்கோ, பாலியல் சமத்துவத்திற்கோ விரோதமாகவோ அல்லது விலகல் சார்ந்தோ இருந்தால், அப்படியான சூழல் உருவானால் இந்திய நீதிமன்றங்களோ அல்லது பாராளுமன்றமோ தலையிடலாம் என்கிறது.
அந்த அடிப்படையில் தான் பல மத தனியார் சட்டங்கள் சார்ந்து பல்வேறு தருணங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. நீதிமன்றங்களும் சந்தர்ப்பங்களுக்கு தகுந்த மாதிரி தீர்ப்பை அளிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் அமலில் இருப்பதாக திட்டமிட்ட மாயை மத அறிஞர்களால் வெகுஜன முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. ஆனால் திருமணம் சம்பந்தமான விவகாரங்களில் மட்டுமே முஸ்லிம் தனியார் சட்டம் இந்தியாவில் அமலில் இருக்கிறது. சொத்துவிவகாரங்கள், வாரிசுரிமை, வக்பு வாரியும் சம்பந்தப்பட்ட சிவில் விவகாரங்கள் அனைத்திற்கும் தற்போது நீதிமன்றங்கள் வழியாக தான் தீர்வு காணப்படுகின்றன.
முத்தலாக்கை பொறுத்தவரை சுதந்திரத்திற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. அதாவது மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் இந்தியாவில் இஸ்லாமிய சிவில் சட்டம் தொகுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. பிந்தைய பிரிட்டன் காலனியாதிக்க காலத்தில் இந்திய மத தனியார் சட்டங்கள் மீது அரசாங்கம் கைவைக்கவில்லை.
இந்நிலையில் 19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் இந்து மத சீர்திருத்த இயக்கங்கள் உருவான பின்பு ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் புற அழுத்தம் காரணமாக அவர்கள் விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி, குழந்தை திருமண ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக சட்டம் கொண்டு வந்தார்கள்.
மேலும் 1935 ல் இந்தியாவில் மத தனியார் சட்டங்கள் எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியில் இந்துமத விவகாரத்தில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கொண்டு வந்த பிரிட்டிஷார் இந்து பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக மாற்றினார்கள். அதே நேரத்தில் முஸ்லிம் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 15 ஆக தீர்மானிக்கப்பட்டது.
இதை அப்போது மத அறிஞர்கள் எதிர்த்த போதும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் இரு சமூகங்களிலும் சிறு வயது பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து நிலவியது.
சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் காலனிய மதிப்பீடுகள் மாறி பின் காலனிய சிந்தனைகளும், கருத்தியல் முறைகளும் உருவாயின. மேலும் சமூக பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் இரு தரப்பிலும் ஏற்பட்டன. இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் முஸ்லிம் பெண்களை உடனடி முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தான் அதிகமாக வழக்கில் இருந்தது.
அதே நேரத்தில் முறையான தலாக் கொடுத்து விவாகரத்து செய்யும் வழக்கம் மிகக்குறைவாக இருந்தது. ஜமா அத்கள் என்ற முஸ்லிம் ஊர்களும், மத நீதிபதியான காஜிகளும் ஆணாதிக்க சிந்தனை கொண்டு ஆண்கள் பக்கம் நிற்பது தான் இதற்கு காரணம்.
இந்நிலையில் இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் அவ்வப்போது உள்ளூர் நீதிமன்றங்களை அணுகி னார்கள். ஆனால் அங்கு சில நேரங்களில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளை மத அறிஞர்கள் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் 1986 ல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷாபானு வழக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் மிகப்பெரும் விழிப்புணர்வையும், தங்கள் உரிமை மீதான பிரக்ஞை பூர்வமான வெளிப்பாட்டையும் ஏற்படுத்தியது. இதனால் முத்தலாக் குறித்த சிந்தனை பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியில் 90 களில் மாநில உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது பல உயர்நீதிமன்றங்கள் இந்த முறையை செல்லாத ஒன்றாக, சட்டவிரோதம் என்று அறிவித்தன.
ஆனால் மத அறிஞர்கள் இதனை மீண்டும் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து இம்முறையிலான தலாக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக உச்சநீதிமன்றம் கடந்த 2002 ஆம் ஆண்டு இதனை செல்லத்தகாத (void) ஒன்று என தீர்ப்பளித்தது.
ஆனாலும் தொடர்ந்து பல பகுதிகளில் இந்த உடனடி முத்தலாக் நடைபெற்றுக்கொண்டு தான் இருந்தது. சமூக, பொருளாதார வளர்ச்சியில் இன்னமும் பின் தங்கி இருக்கும் வட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இது பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும் நேர்பேச்சு, அலைபேசி, எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் போன்ற நவீன முறைகளிலும் இது தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களும், இந்திய முஸ்லிம் பெண்கள் மேம்பாட்டு அமைப்பான பாரதீய முஸ்லிம் மகிளா அந்தோளன் சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் விளைவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தான் இந்த சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது.
கடந்த புதன்கிழமை அன்று பாராளுமன்றத்தில் நிறைவேறி இருக்கும் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு மோடி அரசு காட்டும் அவசரம் தான் சந்தேகத்தை வரவழைக்கிறது. பல பெண்கள் அமைப்புகள் மற்றும் அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் போன்றவை இதனை வரவேற்றிருக்கின்றன. இருந்த போதும் எதிர்க்கட்சிகள் சொன்ன திருத்தங்கள் அனைத்துமே புறந்தள்ளப்பட்டு விட்டன. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு பரிந்துரைத்த திருத்தங்கள் எதுவுமே சட்டத்தில் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இது அமலானால் அது நீண்டகால முறையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பெண்களின் துயரம் தீருமா என்பது காலத்தின் ஓட்டங்களில் இருக்கிறது. மேலும் விவாகரத்து என்பது சிவில் பிரச்சினை. இதனை கிரிமினல் நடவடிக்கையாக கொண்டு வரலாமா? என்ற கேள்வியையும் பலர் எழுப்புகின்றனர். வரதட்சணை என்பதும் சிவில் பிரச்சினை தான். ஆனால் கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டிருப்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
இந்நிலையில் உடனடி முத்தலாக் மூலம் இதுவரை தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்த இளைஞர்கள் அனைவருமே இப்படி சொல்வதன் மூலம் மனைவியுடனான திருமண பந்தம் முறிந்து விடும் என்று தெரிந்தே செய்கிறார்கள். அவர்களுக்கு அது பற்றிய அறிவை ஏற்கனவே இந்த முல்லாக்களின் சமூகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுத்திருக்கிறது. ஒருவேளை இந்த தடைச்சட்டம் அமலானால் அந்த ஆண்களுக்கு இனிமேல் இது குற்ற நடவடிக்கை சார்ந்த ஒன்று என்ற புரிதல் ஏற்படுமா? அதனை உரிய வகையில் சமூகம் போதிக்குமா? திருமண ஒப்பந்த ஷரத்தில் இது சேர்க்கப்படுமா? அல்லது இது குறித்த அறிவோ, புரிதலோ, தெளிவோ இல்லாமல் மீண்டும் முத்தலாக் செய்து மாட்டிக்கொள்வார்களா? என்பதும் கண்டு தான் உணர வேண்டியதிருக்கிறது.
ஆக இந்திய முஸ்லிம் சமூகம், குறிப்பாக வட இந்திய பகுதிகள் இன்னும் சமூக வளர்ச்சியை அடைய வேண்டியதிருக்கிறது. அது இந்த தளங்களில் கடக்க வேண்டிய தூரம் இன்னமும் அதிகம். அதன் ஒரு பகுதியாக தான் இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டியதிருக்கிறது.
mohammed.peer1@gmail.com