திருப்பதி

ந்திர மாநிலத்துக்கு வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு சிறிது சிறிதாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.   இந்த மாதம் முதல் 3 ஆம் தளர்வுக்கான நிபந்தனைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.   அதன்படி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல இ பாஸ் தேவை இல்லை எனவும்,  அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப இந்த விதிகளை மாற்றம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்லவும் இ பாஸ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதே வேளையில் கொரோனா பரவுதல் அதிகம் உள்ள மற்றொரு மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான இ பாஸ் குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநில கோவிட் 19 சிறப்பு அதிகாரி கிருஷ்ணபாபு, “இதுநாள் வரை வெளிமாநிலங்களில் இருந்து வரக் கூடிய வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததால் இ பாஸ் வழங்கப்படாமல் இருந்தது.  இந்த கட்டுப்பாடு இன்று முதல் தளர்வு செய்யபட்டுளது.   ஆந்திர அரசின்  http://spandana1.ap.gov.in/Registration/onlineRegistration.aspx  என்ற இணையதளத்தில் பதிவு செய்வோரின் மொபைலுக்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்பட உள்ளது.

இந்த இ பாஸ் மூலம் அவரவர் அடையாள அட்டையைக் காட்டி மாநிலத்துக்குள் வரலாம்.  இவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் கண்காணிக்கப்பட உள்ளது.  இவர்களின் விவரங்களைக் கொண்டு 15 நாட்கள் கணகாணிக்கபட உள்ளனர்.  இனி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய வருவோருக்கும், சொந்த மற்றும் வர்த்தக நிமித்தமாக ஆந்திர வருவதும் எளிதாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.