இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக உள்ளார்.

இதையடுத்து ரோஹித் சர்மா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் விரைவில் அணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் செய்திகள் வெளியானது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ரோஹித் சர்மா, கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத காரணத்தால் அணியில் இருந்து தாமாகவே விலகியிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஒரு பேட்ஸ்மேனாக நன்கு விளையாட முடியாத போது ஃபார்மில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் தான் விளையாடவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், பேனா, மைக் மற்றும் லேப்டாப் வைத்துக் கொண்டு எனது திறமையை விமர்சிப்பவர்களுக்கும் தான் ஓய்வு பெறப்போவதாக கூறுபவர்களுக்கும் வரும் மாதங்களில் தனது ஆட்டம் பதில் சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.