மேற்கு வங்க மாநில சட்டபேரவைக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மத்திய படையினரை தாக்கியதாக துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியதில் அப்பாவி மக்கள் சிலர் பலியானார்கள்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது இந்த வன்முறைக்கு இதுவரை 20 பேர் வரை பலியானதாக செய்திகள் வெளியான நிலையில் அதில் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பலியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் எதுவும் காவல்துறையால் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வன்முறைக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியாத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்யினர் தான் காரணம் என்று பாஜக-வை சேர்ந்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் கூக்குரல் எழுப்பிவருகின்றனர்.
இவர்களின் இந்த கூக்குரலைக் கேட்டு அந்த மாநில ஆளுநரும் நேற்று மே.வங்க முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி-யிடம் பதவியேற்பு விழா மேடையிலேயே கடுமை காட்டினார்.
இந்நிலையில் இந்த வன்முறைக்கு சித்தால்குச்சி பகுதியை சேர்ந்த மனிக் மொய்த்ரா என்பவர் இறந்து விட்டதாக அவரது படத்துடன் பதிவிட்டிருந்தனர். அந்த படத்தைப் பார்த்து அதிர்ந்துபோன அந்த நபர், “என் பெயர் அப்ரோ பானர்ஜி நான் ஒரு பத்திரிக்கை செய்தியாளர்” என்றும் இவர்கள் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் “நான் உயிருடனும் நலமாகவும் இருக்கிறேன்” என்று ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
தங்கள் பித்தலாட்டம் வெளிப்பட்டதை தொடர்ந்து அந்த பதிவை தங்கள் சமூக வலைதளத்தில் இருந்து பா.ஜ.க.வினர் உடனடியாக நீக்கினர்.
இதுபோல், பிர்ஹம் மாவட்டத்தில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பா.ஜ.க. வை சேர்ந்த எம்.பி. ஸ்வப்னா தாஸ்குப்தா பதிவிட்டுருந்தார், ஆனால் அதுபோல் ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அதே கட்சியை சேர்ந்த அந்த பகுதி வாக்குச்சாவடி முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார், மேலும் அந்த துறை கண்காணிப்பாளர் என்.என். திரிபாதி-யும் இதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
அதுமட்டுமன்றி, இதுபோன்ற ஏராளாமான பொய் தகவல்களுடன் பா.ஜ.க. உறுப்பினர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே இங்குள்ள பெண் ஒருவருக்கு பிரதம மந்திரி வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியதாக ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டிருந்த சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு, இதுபோன்று போலி செய்திகளை பரப்பி வன்முறையை தூண்டுவது என்பது பா.ஜ.க.வினரின் மரபில் ஊறிய ஒன்றாகும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.