நியூயார்க்: சட்டவிரோதமான முறையில் அமெரிக்க குடியுரிமைக்காக முயற்சித்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 67 வயதான இந்தியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பால் சிங் என்ற பெயருடைய இந்தியர், கடந்த 1992ம் ஆண்டு, இந்திய பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா விசாவுடன் அமெரிக்காவில் நுழைந்தார்.
ஆனால், அவரின் விசா போலியானது என தெரியவந்ததால், அவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின்னர் அமெரிக்காவில், ஹர்பால் சிங் மற்றும் சுரீந்தர் சிங் என்ற போலியான பெயர்களில் அடைக்கலம் கோரினார்.
தனது 3வது முயற்சியில், சுரீந்தர் சிங் என்ற போலி பெயருக்கு கடந்த 1996ம் ஆண்டில், அமெரிக்க அடைக்கலம் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த 2015ம் ஆண்டில், இயற்கையான முறையில் அமெரிக்க குடியுரிமைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தபோதுதான், அதற்கான நேர்காணலில், பழைய பொய்யை தவறாக சொல்லி சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து வழக்கு நடைபெற்று, குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தீர்ப்பு தேதி ஆகஸ்ட் மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி