சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம்  ஓப்பனாக விற்பனை செய்யப்பட்டு  வருவதாகவும், அதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என  அப்பகுதி மக்கள், அந்த தொகுதி எம்எல்ஏ குற்றம் சாட்டி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவு தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி  என்பவர், திமுகவுக்கு நெருக்கமானவர் என்பது தெரிய வந்துள்ளது. இவரது இயர்பெயர் கோவிந்தராஜ். அவர்,  அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்தவர்.  திமுகவினரின் ஆதரவால்தான் இவர் ஓப்பனாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

அதுபோல கள்ளச்சாராய விற்பனை போலீஸ் நிலையம் பின்புறம்தான நடைபெற்றதாக அந்த தொகுதி எம்எல்ஏ நேரடி குற்றம் சாட்டி உள்ளார்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 4 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளச்சாராய சாவு, அந்த பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எங்கு சென்றாலும், குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை கூக்குரலே ஒலித்து வருகிறது. இந்த நிலையில், ஊடகத்தினர், கள்ளச்சாராய விற்பனை குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அழுதுகொண்டே பதில் கூறிய பெண்கள், இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகவே கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரிந்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், ஊருக்குள்ளேயே கள்ளச்சாராயம் ஓப்பனாக விற்பனை செய்ததால்தான் பலர் குடித்து இன்று உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

மற்றொருவர் கூறும்போது, டாஸ்மாக்கை விட குறைந்த விலையில் கன்னுக்குட்டி என்பவர் கள்ளச்சாராயத்தை விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் என எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான். அதனால் அவர்கள் உடல்வலிக்காக சிறிது சாராயம் அருந்தி வருகின்றனர். அதுவும் சமீப காலமாகத்தான் இந்த பழக்கம் பெண்களிடமும் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால்தான் பலர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் கூறும்போது, கள்ளச்சாராய பாதிப்பு காரணமாக பலருக்கு வாந்தி வயிற்றுவலி ஏற்பட்டது. அதை உடனே கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், இதை மாவட்ட ஆட்சி தலைவர் (இடமாற்றம் செய்யப்பட்டவர்) கண்டுகொள்மல்,  சாவுக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல. வாந்தி, வயிற்று போக்குதான் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி விட்டார். அதனால் போதிய சிகிச்சை கிடைக்காமல் பலர் துடித்து இறந்தனர் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை குறைத்திருக்க முடியும் என்றார்கள்.

அருகே உள்ள கருணாபுரத்தை சேர்ந்த பெண்கள் கூறும்போது, `எங்கள் தெரு அருகில் உள்ள தெருக்களிலேயே சாராயம் விற்கிறார்கள். எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான். கையில் காசு கிடைத்ததும் பாக்கெட்டில் சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள். ஊருக்கு வெளியே எங்காவது விற்றால் வயதானவர்கள் அவ்வளவு தூரம் நடந்து சென்று குடிக்க யோசிப்பார்கள். ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்’ என்றார். காலை 5 மணிக்கே ஒரு பாக்கெட் சாராயத்தை தனது கணவர் குடித்துவிட்டு கண் எரியுது, வயிறு வலிக்குது என்று துடித்ததாகவும் உடனே ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்ததாகவும் கூறினார்.

இந்த கள்ளச்சாராயம் சாவு குறித்து கூறிய அந்த தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், பொதுமக்களின் `வாந்தி, வயிற்று போக்குக்கு காரணமே கள்ளச்சாராயம் தான். சாராய விற்பனை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மேட்டில் தாராளமாக நடக்கிறது. இது போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ளது.  இதை காவல்துறையினர்  கண்டும் காணாமல் இருந்தது தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணமாகி விட்டதாக குற்றம் சுமத்தி உள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், கோவிந்தராஜ் மனைவி விஜயா உள்பட 4 பேரை  தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…